Friday, October 29, 2010

ஜென் இலைகள் 2





ஒரு ஆழமான காயத்தின்
சீழ்பிடித்த வலியும்

நான் என் தந்தையைக்
கை ஓங்கிய தருணத்தின்
வலியும்

இப்போது என்பிள்ளை
என் கழுத்தைப் பிடித்தமுக்கிய
தருணத்தின் வலியும்

ஒன்றாகவே
உணர்த்தப்படுகின்றன

நெருக்கடியான சாலையின்நடுவே
திறந்த மார்புகளுடன்
அலையும் அந்த
மனம் பிறழ்ந்த பெண்ணின்
உணர்வான காலத்தின்
வலிகளைப் போலவே....

கோயிலைத்
திறக்கிற கதவின் ஓலியும்
பிச்சையிடுதலுக்காக
திறக்கிற வீட்டுக்கதவின் ஒலியும்
ஓர்
இசையாகப் பரவுகிறதெங்கும்..




எந்தப் பயணத்திலும்
கடைசியாகவே
நானிருந்தாலும்
அந்தப் பயணம்
என்னைக் கொண்டு
முடிகிறதென்பது
உவகையுடன்
தொடர்ந்து
பயணித்துக்கொண்டிருக்கிறது...





இரவில்
தொடர்ந்து குழந்தையை
அழவிடுபவர்கள்
நரகத்திற்குப் போகக் கடவர்....
என்னை மலடியாக
சாபமிட்ட கடவுளின்
சாபத்தைப் போல...
கொட்டிவிட்ட
டம்ளரிலிருந்து
நீர் பரவுதலைப்போல
வெயில் பரவும் சாலையின்
நடுவே
அதன் இயல்பில்
கடந்துகொண்டிருக்கும்
மரவட்டையின்மேல்
நசுக்கிவிடாமல்
சட்டென்று டூவீலரைத்
வளைக்கிறேன்
அதன்
நம்பிக்கையைக்
காக்கும் பொருட்டு.....





எரியும்
நண்பனின் சடலத்திலிருந்து
அவன் மகனின்
அண்மைக்கு வருகிறது
ஒரு வெப்பம்
அவன் உடலில் வழியும்
நீரின் குளிர்மையைத்
தணிக்கவும்
தானின்றி தனயன் இனி
தாங்கப்போகும்
வெப்பம் தணிக்கவுமாக....
என் கண்களிலிருந்து
வருகின்றன
நீர்த்துளிகள்
அவனுக்கு அனுசரணையாக
வேறன்றி...